pelawatta-swimming-pool-body-found-pelawatta-swimming-pool-body-found
பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட செல்வந்தரின் கார் நீர்கொழும்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 31ஆம் திகதி பழுதடைந்த வாகனங்களை கொண்டு செல்லும் வாகனம் ஒன்றில் குறித்த கார் கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல நுழைவாயில் பகுதியில் குறித்த கார் பழுதடைந்த வாகனங்களை கொண்டு செல்லும் வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தமது வாகன பழுதுபார்க்கும் நிலையத்துக்கு முன்பாக உரிமையாளர் இன்றி நீண்ட நாட்களாக மகிழுந்து ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் உரிமையாளர் நீர்கொழும்பு காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார்.
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே நேற்று (02) மதியம் பெலவத்தை பகுதியிலுள்ள வீடொன்றிலுள்ள நீர்த்தடாகத்தில் இருந்து குறித்த செல்வந்தர் சடலமாக மீட்கப்பட்டார்.
சி.சி.ரி.வி காணொளி காட்சிகளுக்கு அமைய குறித்த பழுதடைந்த வாகனத்தை ஏற்றிச் சென்ற வாகனத்துடன் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த காரை அங்கு நிறுத்தி விட்டு அவர்கள் இருவரும் அந்த பழுதடைந்த ஏற்றிச் சென்ற வாகனத்திலேயே அங்கிருந்து செல்லும் காணொளி காட்சிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இந்தநிலையில் குறித்த பழுதடைந்த வாகனங்களை ஏற்றிச் செல்லும் வாகனம் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
pelawatta-swimming-pool-body-found-pelawatta-swimming-pool-body-found