politicle-and-civil-parties-opposed-to-independant-day
இன்றைய தின சுதந்திர தினத்தை புறக்கணிப்பதாக பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ளனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய நிலையில் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை புறக்கணிப்பதாக கத்தோலிக்க சபை அறிவித்துள்ளது.
அத்துடன் தமிழரசு கட்சியும் சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளது.
அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய நிர்வாக முடக்கல் போராட்டம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கிலிருந்து கிழக்குக்கு வாகனப் பேரணி ஒன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நான்கு நாட்களாக இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
முதல் நாளான இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து இரணைமடு வரையில் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
இரண்டாம் நாள் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரை இந்த பேரணி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நாள் முல்லைத்தீவு முதல் திருகோணமலை வரையிலும் நான்காம் நாள் அங்கிருந்து மட்டக்களப்பு வரையிலும் பேரணி முன்னெடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இன்றைய தினம் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் உள்ளிட்ட தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறும் கோட்டை, கொம்பனி வீதி மற்றும் கொள்ளுபிட்டி ஆகிய காவல்துறையினர் கோரியிருந்தனர்.
காலி முகத்திடல் பகுதியை நோக்கிய வீதிகளுக்கு நுழைவதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
எவ்வாறாயினும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு உரிமை உள்ளதாகவும் கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் அதிக நிதியை பயன்படுத்தி இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இவ்வாறான பின்னணியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினருக்கு மேலதிகமாக முப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
politicle-and-civil-parties-opposed-to-independant-day