பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டதற்கான காரணம் வௌியானது


பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டதற்கான காரணம் வௌியானது

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தி, கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்ட இலங்கையர் (Priyantha Kumara Pakistan) தொடர்பான, மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனேமுல்லை – வெலிபிஹில்ல பகுதியைச் சேர்ந்த, பிரியந்த குமார தியவடன என்ற குறித்த நபர், 11 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்; இம்ரான்கானின் டுவிட்டர் பதிவு

2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்ரசண்டி டெக்ஸ்டைல் என்ற ஆடைத் தொழிற்சாலையில், கைத்தொழில் பொறியியல் முகாமையாளராக பணியில் இணைந்ததுடன், 2012இல் சியல்கோட்டில் உள்ள ராஜ்கோ என்ற தொழிற்சாலையில் பொதுமுகாமையாளராக பணியில் இணைந்துள்ளார்.

தமது தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த மதசார் பதாகை ஒன்றை அவர் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஹம்மது நபியின் பெயரைக் கொண்ட சுவரொட்டியை இழிவுபடுத்தியதாக தொழிற்சாலை ஊழியர்களின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானில் இலங்கையர் (Priyantha Kumara Pakistan) கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.