இதுவரை தகவல் எதனையும் வழங்காதிருக்கும் மஹிந்தானந்த

கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொண்டிருந்தது.

குறித்த போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வலுத்தது.

எனவே முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதுவரையில் எந்தவொரு தகவலையும் தமக்கு வழங்கவில்லை என குறித்த அமைச்சின் செயலாளர் K.D.S ருவன்சந்ர தெரிவித்தார்.