ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவில் இன்று சாட்சியளித்த ரிஷாத்

ஜனாதிபதி செயலகம் அனுமதி மறுத்திருந்த இன்சாப் இப்ராஹிமின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான அனுமதியை, தனது அமைச்சினூடாகப் பெறமுயன்ற அவரின் அத்தனை முயற்சிகளையும் தான் முற்றாக நிராகரித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த இன்சாப் இப்ராஹீம், தனது அமைச்சுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்ததாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியங்களை வழங்கியபோதே, ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழு இன்று (19) ஏழு மணி நேரம், இது தொடர்பில் அவரை விசாரணை செய்தது. இதன் போது, ஈஸ்டர் தாக்குதலுக்கும் தனது குடும்பத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லையென, ரிஷாட் பதியுதீன் தகுந்த ஆதாரங்களுடன் சாட்சிகளை முன்வைத்தார்.

இங்கு சாட்சியமளித்த அவர் தெரிவித்ததாவது.

இன்சாப் இப்ராஹிமின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான அனுமதியை ஜனாதிபதி செயலகம் நிறுத்தியிருந்தது. இவ்வனுமதியை எனது அமைச்சினூடாகப் பெறும் நோக்கில், அடிக்கடி எனது அமைச்சுக்கு வந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.

இவ்விடயம் கை கூடாததால் எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனைத் தொடர்பு கொண்டு, தனது நிலைமைகளை விளக்கியுள்ளார்.

ஏற்றுமதிகள் தடைப்பட்டதால் கம்பனியில் பணியாற்றுவோருக்கு சம்பளம் கூடக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பான அமைச்சரான உனது சகோதரரிடம் பேசி, அனுமதியைப் பெற்றுத் தருமாறும் இன்சாப் இப்ராஹீம், எனது சகோதரரான ரியாஜ் பதியுதீனைக் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் 2019ஆம் ஆண்டு ஆறு உள் அழைப்புக்களை அவர் எனது சகோதரருக்கு எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், எனது சகோதரர் ஒரு அழைப்பையாவது இன்சாப் இப்ராஹுமுக்கு எடுக்கவில்லை.

வியாபாரத் தொடர்பில் நண்பராகவும், எனது ஊரவர் ஒருவரின் நெருங்கிய உறவினருமாகவும் அறிமுகமான இன்சாப் இப்ராஹிமின் கோரிக்கை தொடர்பில், எனது சகோதரர் என்னை தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனாதிபதி செயலகம் அனுமதி மறுத்த விடயத்தை தன்னால் செய்ய முடியாதெனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டேன்.

இதுபற்றி அறிந்த இன்சாப் இப்றாஹீம் ஆத்திரமடைந்தவராக, தொலைபேசியில் என்னை ஏசியதுடன், கோரிக்கை கடிதம் அனுப்பவுள்ளதாகவும் எனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.
இவர் குறிப்பிட்டது போல 2019.04.03 இல் அக்கடிதம் எனது அமைச்சுக்கு வந்தது. அவருக்கு வேண்டப்பட்டவராகவோ, விருப்பமுடையோராகவோ நாம் இருந்திருந்தால், எங்களை ஏசியது மட்டுமன்றி கோரிக்கை கடிதமும் அனுப்பியிருக்கமாட்டார்.

இன்சாப் இப்ராஹிமுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக, 2020 ஏப்ரல்14 ஆம் திகதியன்று ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இன்சாப் இப்ராஹிமுடன் 250 தடவைகள் தொலைபேசியில் உள், வெளி அழைப்புக்களால் தொடர்புற்றிருந்த ஒருவர், கைதான தினமே விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், 600 தடவைகள் தொடர்புகொண்டவரும் சில நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், வெறும் ஆறு உள் அழைப்புக்கள் வந்திருந்த எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை மட்டும் இரண்டு மாதங்களாகத் தடுத்து வைத்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளே இவை.

அரசியலுக்காக எனது சகோதரர் போன்ற அப்பாவிகள் பழிவாங்கப்படுவது பெரும் கவலையளிக்கிறது. இந்நாட்டில் நீதி, நேர்மை நிலைக்கும் போது, உண்மை வெளிவந்து, சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

ஞானசார தேரர் போன்றோர் புத்த பெருமானின் போதனைகளை உண்மையாகப் பின்பற்றுவோராக இருந்தால், சமூக மோதலை உருவாக்கும் கருத்துக்கள், ஏனைய சமூகங்களின் மதங்களைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை தெரிவிக்கமாட்டார் என்றும் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி ஆணைக்குழுவில் தான் வழங்கிய சாட்சியங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.