ஈஸ்டர் தாக்குதல் – நேற்றைய விசாரணையில் வௌியான தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் எந்த தகவல்களும் உரியமுறையில் பகிரப்படவில்லை என்று மேல்மாகாணத்துக்கான சிரேஸ்ட காவல்துறை உப அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நேற்று இடம்பெற்றபோது அவர் சாட்சியமளித்தார்.

தாக்குதல்களுக்கு முன்னர் காவல்துறை அதிபர் அலுவலகத்தில் இருந்து ஒரு ரகசிய ஆவணத்தை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

அதில் தௌஹீத் ஜமாத்தின் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

‘உளவுத்துறை’ மற்றும் ‘முன்னுரிமை’ எனக் குறிக்கப்பட்டிருந்த அந்த கடிதம் புலனாய்வு சேவைகள் (எஸ்.ஐ.எஸ்) இயக்குநர் நிலந்த ஜயவர்தன வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தமக்கு அனுப்பப்பட்டதாக சாட்சி குறிப்பிட்டார்.

எனினும் அந்த கடிதம் தமக்கு கிடைத்ததா? என்பதை காவல்துறை அதிபர் உறுதிப்படுத்திக்கொள்ளாதபடியால் தாம் அந்தக்கடிதம் தொடர்பில் காவல்துறை அதிபரை மீண்டும் தொடர்புகொள்ளவில்லை என்று நந்தன முனசிங்க சாட்சியமளித்தார்.

இதன்போது அந்தக் கடிதம் உளவுத்துறை ஆவணம் என்பதால் தேசிய புலனாய்வுத் தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்தீர்களா என்று ஆணைக்குழு சாட்சியைக் கேட்டது.

அதற்கு பதிலளித்த சாட்சி, அந்தக் கடிதத்தைப் பெற்ற 2 நாட்களுக்குப் பின்னர் தாம் புலனாய்வு சேவைகள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவைத் தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்.

முஸ்லிம் தீவிரவாதம் குறித்த ஏதேனும் அறிக்கைகள் இந்த எச்சரிக்கைக் கடிதத்திற்கு முன்னர் கிடைத்ததா? என்று சட்டத்தரணி இதன்போது சாட்சியிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த எச்சரிக்கை கடிதம் தொடர்பில் காவல்துறை அதிபர் மற்றும் பிற மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு இடையில் ஏதேனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டதா என சாட்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும் அவ்வாறான கலந்துரையாடல் நடத்தப்படவில்லை என்று சாடசியான சிரேஸ்ட உதவி காவல்துறை அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுத்திருக்கமுடியும் என்றும் சாட்சி தெரிவித்தார்.