ஈஸ்டர் தாக்குதல் – பொலிஸ் மா அதிபர் கவனக் குறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்தபோதும் பொலிஸ் மா அதிபர் அதனை கருத்திற் கொள்ளவில்லை என நம்புவதாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நேற்று இடம்பெற்ற போது இந்த சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்துக்கு அவர் முக்கியத்துவம் வழங்காது சாதாரண விடயமாக அவர் கருதிவிட்டதாகவும் கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே அவர் குறித்த புலனாய்வு எச்சரிக்கை அறிக்கையில் “அவசியமான நடவடிக்கை” என்ற பதத்தை பயன்படுத்தவில்லை என்று கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கஜநாயக்க, 2003 முதல் 2011 வரையான காலப்பகுதியில் தேசிய புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றினார்.

வழக்கமாக பொலிஸ் மா அதிபர் பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறான தகவல்கள் கிடைக்கின்றபோது அவற்றை ஜனாதிபதி, அவரின் செயலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதேவேளை தேசிய புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் ஒருவர் இவ்வாறான தகவல்களை ஜனாதிபதிக்கு நேரடியாக தெரியப்படுத்துவார் என்றும் கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அரச சட்டத்தரணியால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பொலிஸாரின் முன்னெச்சரிக்கை ஆவணத்தை சாட்சியிடம் காட்டி அதில் “ஐஸ் ஒன்லி” ‘Eyes Only’ என்று குறிப்பிடப்பட்டது எதனை குறிக்கும் என்று வினவினார்.

இதற்கு பதிலளித்த கஜநாயக்க, குறிப்பிட்ட தனிப்பட்ட ஒருவருக்கு அனுப்பப்படும் மிகவும் இரகசியமான தகவல் என்று கஜநாயக்க பதிலளித்துள்ளார்.