ஈஸ்டர் தாக்குதல்-வௌியான மற்றொரு சிசிடீவி காணொளி

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சஹாரன் ஹசீமிற்கு இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவி புரிந்தவர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் என முன்னாள் குற்ற புலனாய்வு துறையின் பணிப்பாளர் நேற்று முன்தினம் (22) உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன் மீண்டும் சாட்சியம் வழங்கிய அவர், ரிஃப்கான் பதியூதீன் இதற்கு முன்னர் வெளியிட்ட ஊடக அறிக்கை பொய்யானது என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிஃப்கான் பதியுதீன், கடந்த 2017 மார்ச் மாதம் காத்தான்குடி அல்லியார் சந்திப்பில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சஹாரான் ஹாசிமுக்கு இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவியதாக நேற்று முன்தினம் முன்னாள் குற்ற புலனாய்வு துறையின் பணிப்பாளர் சாட்ச்சியமளித்தார்.

இருப்பினும், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிஃப்கான் பதியுதீன் நேற்று (23) அந்த செய்திக் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தனது தம்பி ரியாஸ் மட்டுமே தற்போது குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரோ அல்லது அவரது சகோதரரோ சஹாரான் ஹாசீமை நேரில் சந்தித்ததில்லை என்றும் ரிஃப்கான் பதியுதீன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சஹாரான் ஹாசீமுக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்ல ரஹ்கான் பதியுதீன் உதவியதாக ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த குற்ற புலனாய்வு துறையின் பணிப்பாளர் மேலதிக தகவல்களை முன்வைக்க நேற்று (23) மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழு முன் தனது சாட்சியத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், அதாவது சஹ்ரான் ஹாசீம் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல அவருக்கு கிடைத்த உளவுத்துறை தகவலை தெளிவாகக் குறிக்கும் பெயர் ரிஃப்கான் பதியுதீன் என்று அவர் உறுதிப்பட கூறினார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் குறித்து விசாரணை நடத்தும் குற்ற புலனாய்வுத் துறையின் பிரதம பொலிஸ் பரிசோதகர், வை.அரவிந்த நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார்.

அப்போது அவர், இலங்கையில் பிரசித்திப்பெற்ற மசாலா தூள் விற்பனையாளரான மொஹமட் யூசுப் இப்ராஹிமின் மகன், சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி கொலோசஸ் என்ற நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு வயர் உற்பத்திகளை மீள் ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்பு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சின் கீழ் தொழில்துறை அபிவிருத்தி சபை நிறுவனம் செயற்பட்டடிருந்தமையால் அந்த நிறுவனத்தில் பிரச்சினைகள் எழும் போதேல்லாம் ரிஃப்கான் பதியுதீன் அதனை தலையிட்டு தீர்த்து வைத்துள்ளதாக சாட்சியாளர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல் சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்சாப் அஹமட்டின் தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலை தாக்குதலுக்கு வழிவகுத்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய சி.சி.டி.வி காட்சிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நேற்று கையளிக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 14 மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஊடகங்களில் வெளிவராத அந்த சி.சி.டி.வி காட்சிகள் இவ்வாறு வௌியிடப்பட்டுள்ளன.