கஞ்சிப்பான இம்ரானின் தந்தை மீதான தாக்குதலுக்கான காரணம்

கஞ்சிபாண இம்ரானின் தந்தையை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகத்துக்குரியவர்களையும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் காவல்துறைக்கு வழங்கியுள்ளது.

அவர்களை நேற்றைய தினம் புதுக்கடை 4 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் மன்ன கண்ணா எனப்படும் மாரிமுத்து கணேசன் மற்றும் பாட்சா என் அறியப்படும் மகேந்திரன் பிரதீப் ஆகிய சந்தேகத்துக்குரியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 65 வயதுடைய மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நஜித் என்ற காஞ்சிபாண இம்ரானின் தந்தை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கஞ்சிபாண இம்ரானின் தந்தை மாளிவகாவத்தை சத்தர்ம மாவத்தைக்கு அருகில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் பிரவேசித்த 3 பேர் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் முச்சக்கர வண்டியில் தப்பிச் செல்லும் காட்சிகள் சீ.சீ.ரீ.வியில் பதிவாகியுள்ளன.

இந்த தாக்குதல் இந்தியாவில் மறைந்து வாழும் போதை பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றசெயல்களை புரிபவருமான புகுடு கண்ணாவின் திட்டம் என தெரியவந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் புகுடு கண்ணா என்பவரின் தந்தை கஞ்சிப்பான இம்ரானால் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் செயலாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.