கருணாவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு- கைது செய்ய கோரும் பௌத்த தேரர்கள்

படையினர் 3000 பேரை கொலை செய்த கருணா அம்மானைக் கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்துகிறது.

கொழும்பில் இன்று சனிக்கிழமை பகல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகல்கந்த சுதத்த தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு பகுதியில் நேற்று நடந்த பிரசார ஒன்றில் கருணா அம்மான் உரை நிகழ்த்தியபோது, போர்க்காலத்தில் ஆனையிறவு பகுதியில்2000, 3000 இராணுவ சிப்பாய்களை கொன்றதாக கூறியுள்ளார்.

இதேவேளை ஆனையிறவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்தேன் என விநாயகமூர்த்தி முரளீதரன் வெளியிட்டுள்ள கருத்திற்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ருவான் விஜயவர்த்தன, தனது ருவிட்டர் பதிவிலேயே கருணாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த ருவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரசினை விட தான்ஆபத்தானவன். ஆனையிறவில் 2000 முதல் 3000 படையினரையும் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான படைவீரர்களையும் கொலை செய்தேன் என கருணா தெரிவித்துள்ளார்.

அதாவது ராஜபக்ஷ, தேசியவாதமும் தேசப்பற்றும் பேசும் நிலையில், கிழக்கில் அவர்களுடைய நபர் ஆயிரக்கணக்கான படைவீரர்களை கொலை செய்தேன் என தெரிவிக்கின்றார்” என குறித்த ருவிட்டர் பதிவில் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.