கருணாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் – எச்சரிக்கை விடுத்துள்ள பௌத்த தேரர்கள்

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைப் படுகொலை செய்த கருணாவை உடன் கைது செய்து சிறையில் அடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையேல் நாடெங்கிலும் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டங்களை நடத்துவோமென மாகாண தேரர்களின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனையிறவு சண்டையின்போது ஒரே இரவில் மூவாயிரம் வரையிலான இராணுவத்தினரைத் தாம் கொன்றொழித்ததாகக் கருணா வெளியிட்டிருந்த கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரைக் கைதுசெய்யுமாறு பௌத்த தேரர்கள் மற்றும் எதிரணியினர் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்துக் கருணாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று 7 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அவர் கைதுசெய்யப்படவில்லை. இந்தநிலையிலேயே ஓமல்பே சோபித தேரர் மேற்கண்டவாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாதவது,

மனிதாபிமானம் இன்றி எமது இராணுவத்தினரைக் கொன்றழித்த கொலைகாரன் கருணா அம்மானுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பாதுகாப்பு வழங்குவது இராணுவத்தினருக்கும் நாட்டுக்கும் செய்யும் துரோகமாகவே நாம் பார்ப்போம்.

எனவே, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உடன் நடவடிக்கை எடுத்து கருணா அம்மானைக் கைதுசெய்யவேண்டும்.

அவரைச் சிறையில் அடைத்து தக்க தண்டனை வழங்க வேண்டும். இல்லையேல் அரசுக்கு எதிராக நாடு கிளர்ந்தெழும்.

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொலை செய்ததாக தனது நாவினாலே கருணா அம்மான் தெரிவிக்கும்போது அதற்கு வேறு சாட்சியங்கள் தேவையில்லை.

எனவே, அவரிடம் விசாரணை மட்டும் போதாது. அது சிங்கள மக்களைச் சமாளிப்பதாக அமையும்.

நீதித்துறையின் கெளரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில் கருணா அம்மானை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.