கருணா அம்மான் தொடர்பில் பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்

வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியாத நபர் நாட்டின் தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான தலைவன் எந்தவொரு நிலைமைக்கும் முகம் கொடுக்க கூடிய நபராக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

விநாயகமூர்த்தி எனப்படும் கருணா வெளியிட்ட கருத்து சமகாலத்தில் எதிர்க்கட்சி மேடைகளின் பிரதான தலைப்பாகியுள்ளது.

எனினும் விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய நபர்கள் தொடர்பில் எதிர்க்கட்சி மேடைகளில் குரல் எழுப்பப்படுவதில்லை.

அப்போதைய அரசியல்வாதிகள் விடுதலை புலிகள் அமைப்பிற்கு வழங்கிய ஆயுதங்களால் எங்கள் இராணுவத்தினரே கொலை செய்யப்பட்டனர் என்பதனை நினைவுகூர விரும்புகின்றேன்.

கருணாவின் வரலாறு இரகசியமான விடயம் அல்ல. அனைவருக்கும் அது தெரிந்த விடயமே என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு படைமுகாமில் ஒரே நாளில் பல ஆயிரம் இராணுவத்தினரை தான் கொலை செய்ததாக கருணா வெளியிட்ட கூற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.