கருணா குற்றவாளி என்பதற்கான சாட்சியம் தற்போது கிடைத்துள்ளது

தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வருமாறு கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், இராணுவத்தை சேர்ந்த இரண்டாயிரம் முதல் 3 ஆயிரம் பேரை கொலை செய்த தமிழ் புலி வீரானாக கிழக்கு தமிழ் மக்களின் ஆசியுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு வர முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் இப்படி கூறி வாக்கு கேட்டு வரும் நிலையில், மறுபுறம் ஒரு அணியினர் படையினரை காட்டி வாக்கு கேட்டு வருகின்றனர். இதன் மூலம் ராஜபக்சவினரின் இரட்டை நிலைப்பாடு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ உண்மையில் அரசாங்கம் படையினரை காட்டியே வாக்கு கேட்டு வருகிறது. படையினர் நாட்டுக்காக உயிரை கொடுத்தனர்.

இந்த படையினரின் உரிமைகளை பாதுகாக்கும் அரசாங்கம் போலவே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. சில வேட்பாளர்கள் தாம் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என வாக்கு கேட்கின்றனர்.

படையினருக்காக நாங்கள் ஜெனிவாவுக்கு சென்றோம். படையினருக்காக எமக்கு வாக்களியுங்கள் என சில வேட்பாளர்கள் உரத்த குரலில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் படைப் பிரிவின் தலைவராக இருந்தார். அவர் அந்த காலத்தில் குற்றங்களை செய்ததாக கூறினர். எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான சாட்சியங்களும் முன்வைக்கப்படவில்லை.

அவர் வேறு கட்சியில் போட்டியிட்டாலும் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு வழங்குவதாக அவர் கூறியுள்ளார். தேசிய பட்டியலில் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

எனினும் தேசிய பட்டியலில் செல்லும் எண்ணம் இல்லை. தமிழ் மக்களின் ஆசியுடன் கிழக்கு மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்ல போவதாக கூறுகிறார்.

இலங்கை இராணுவத்தை சேர்ந்த மூவாராயிரம் பேரை கொன்ற புலி வீரனாக நாடாளுமன்றத்திற்கு செல்ல முயற்சித்து வருகிறார்.

கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் படையினருக்காக வாக்கு கேட்கின்றனர். இதன் மூலமே ராஜபக்சவினரின் மோசடியான இரட்டை நிலைப்பாடு தெரிகிறது.

எவ்வாறாயினும் கருணா அம்மான் குற்றவாளி என்பதற்கான சாட்சியம் தற்போது கிடைத்துள்ளது.

இதனால், குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல் கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.