சுமந்திரனை கடுமையாக தாக்கும் கருணா

சுமந்திரனின் பொய் வாதங்கள் கிழக்கு மக்களிடம் எடுபடாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கல்முனை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுமந்திரனை கிழக்கு மக்கள் கணக்கெடுக்கப் போவதில்லை. அவரது வாதங்கள் கிழக்கு மக்களிடம் எடுபடாது. ஏனெனில் அவரது செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் இன்னும் அரசியல் கைதிகளாக உள்ளனர்.

சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவருக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது. அவர் கொழும்பிலே பிறந்து வாழ்ந்தவர். சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தோல்வியடையும் என்பதை உணர்ந்து கொண்டுதான் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களுடன் ஒப்பிடும் போது சுமந்திரன் அரசியல் கத்துக்குட்டி” என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.