தமிழர்களிடமும் முஸ்லிம்களிடமும் கையேந்த மாட்டோம்

வாக்குகளுக்காக ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கையேந்தவில்லை. அதேபோல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களிடம் கையேந்தமாட்டோம்.

அவர்கள் விரும்பினால் எமது வெற்றியின் பங்குதாரர்களாக மாறலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிரிகள் அல்லர். அவர்கள் தான் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றார்கள். அதனால் தான் அவர்களின் ஆதரவுக்காக ஜனாதிபதித் தேர்தலில் நாம் காத்திருக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களின் ஆதரவை வேண்டி நிற்க நாம் தயாரில்லை. ஏனெனில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு இன்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை பொதுஜன பெரமுன பெறும்.

ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களித்தார்கள். ஆனால், தமிழ், முஸ்லிம் மக்களால் அவரை வெல்ல வைக்க முடிந்ததா?

வடக்கு, கிழக்கிலுள்ள 80 வீதத்துக்கும் அதிகமான தமிழ்இ முஸ்லிம் வாக்காளர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தும் இறுதியில் அவர் படுதோல்வியே அடைந்தார். இன்று அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து கூடத் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

வேறு வழியின்றி முகவரியற்ற ஒரு கட்சியில் பொதுத்தேர்தலில் அவர் போட்டியிட வேண்டிய நிலைமை வந்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான பௌத்த, சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கே வாக்களித்து அவரை அமோக வெற்றியடைய வைத்தார்கள்.

எனவேஇ அவர் தலைமையிலான இந்த அரசையும் பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் பௌத்த, சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள்.

அவர்களின் வாக்கு பொதுஜன முன்னணியின் ‘தாமரை மொட்டு’ சின்னத்துக்கே. அதுவே இலங்கை அரசியல் வரலாற்றின் வெற்றிச் சின்னமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.