தர்காநகர் தாக்குதல் சம்பவம் போன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்த திட்டமிட்ட சஹ்ரான் குழு

2014 ஆம் ஆண்டு அளுத்கம தர்கா நகரில் அமைதியின்மை ஏற்பட்ட போது அதேபோன்ற ஒரு நிலைமையை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்த சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினர் திட்டமிட்டதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சாட்சியம் வழங்கிய கிழக்கு மாகாண முன்னாள் கட்டளையதிகாரியாக செயற்பட்ட ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரால் என்ரூ லால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

அப்போதைய பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாணத்திற்காக இரண்டு விஷேட புலனாய்வு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒன்று அம்பாறை மற்றும் மட்டக்களப்பு உள்ளடக்கியதாகவும், மற்றைய புலனாய்வு பிரிவு திருகோணமலை மாவட்டத்திலும் ஸ்தாபிக்கப்பட்டது.

அதற்காக இராணுவம் மற்றும் காவற்துறை புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த காலப்பகுதியில் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர்களாக பூஜித் ஜயசுந்தர மற்றும் நந்தன முனசிங்க ஆகியோர் செயற்பட்டதாகவும் மாதாந்தம் இடம்பெற்ற புலனாய்வு தகவல் மீளாய்வு கூட்டத்தில் குறித்த இரண்டு பேரும் பங்கேற்றதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலகட்டத்தில் கிழக்கு மாகாண மக்களுக்கிடையே மாற்றங்களை காணக் கூடியதாக இருந்ததா? என ஆணைக்குழு சாட்சியாளரிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், காத்தான்குடி மற்றும் கிண்ணியா பகுதிகளில் அரேபிய மயமாக ஆரம்பித்த போதும் புலனாய்வு தரப்பினர் விரைவாக அது தொடர்பான தகவல்களை சேரித்ததன் ஊடாக அந்த செயற்பாடு தடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.