தேர்தலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறினார் மங்கள

அரசியலில் தோல்வி என்பது சாதாரண நிகழ்வாகும். எனினும் இலங்கையில் ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புக்களும் மையத்தில் பழுதடைந்துவிட்டதாக கருதியமை காரணமாகவே நாடாளுமன்ற தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றம் இப்போது சந்தேகத்திற்குரிய குற்றவியல் கூறுகளுக்கான பாதுகாப்பான இல்லமாக மாறியுள்ளது.

இராணுவமயமாக்களையும் பெரும்பான்மையினக் கொள்கையையும் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் பகிரங்கமாக ஆதரிக்கிறது.

எனவே ஜனநாயகத்துக்கான போராட்டம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் அல்ல, கிராமங்களிலும் நகரங்களிலுமே முன்னெடுக்கப்படும் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சஜித் பிரேமதாசவை பொறுத்தவரை அவர் ஒழுக்கம் மிக்கவர். முழுமையான அரசியல் தகுதியைக்கொண்டவர். தமது அமைச்சுக்கு நிதியொதுக்கப்படும்போது அவற்றை உரியமுறையில் செலவிழித்து திட்டங்களை நிறைவேற்றுபவர்.

எனினும் அவரின் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர் தமது லிபரல் கொள்கைக்கு ஏற்புடையவர்களாக இருக்கவில்லை. சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் உறவுகளை கொண்டிருக்கின்றனர் என்று மங்கள சமரவீர குறிப்பி;ட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை அவரை விமர்சிக்கக்கூடாது என்று கூறவில்லை. இந்தநிலையில் பல தடவைகளில் தாம் விமர்சித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர,ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக நோக்குக்கொண்ட தலைவராவார் என்று தெரிவித்துள்ளார்.

எனவே அவரே இலங்கைக்கு பொருத்தமுள்ள தலைவராவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை பொறுத்தவரையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர, லிபரல் ஜனநாயகத்துக்காக தாம் எப்போதும் துணைநிற்கப்போவதாக தெரிவித்துள்ளார்.