பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் – நான்கு பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் நடந்தது.

வாகன நிறுத்துமிடம் வழியாகப் பங்குச்சந்தை கட்டடத்துக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள், பிரதான நுழைவு வாயிலில் கையெறி குண்டை வீசியுள்ளனர்.

அலுவலகத்தின் பாதுகாவலர்கள் உட்படக் காயமடைந்த 3 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது என பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார்.

இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளரும், தற்கொலை தாக்குதலை தாங்கள் நடத்தியதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘துப்பாக்கிதாரிகள் சில்வர் கொரோலா காரில் வந்தனர். கட்டடத்தின் வாயில் அருகே, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது அங்கு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இரண்டு துப்பாக்கிதாரிகள் அங்கு கொல்லப்பட்டனர். ஆனால், இருவர் எப்படியோ தப்பித்து உள்ளே சென்றுள்ளனர்.

காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்று சுட்டுக்கொன்றுள்ளனர்” என சிந்து மாகாண கூடுதல் ஐ.ஜி குலாம் நபி மேமோன் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் விசேட காவல்துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக துப்பாக்கிதாரிகள் நால்வரும் சுட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.