பொலிஸாரின் அதிரடியில் கைது செய்யப்பட்ட 08 பேர்

கடந்த 24 மணித்தியாலங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த 8 பேரும் மத்துகம, ஹங்வெல்ல, ரத்மலான மற்றும் ரம்புக்கன பகுதிகளில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்துகம பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் 26 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் சில மீட்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹங்வெல்ல பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் 22, 30 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரத்மலான பகுதியில் வைத்து 70 கிராம் ஹெரோயின் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் ரம்புக்கன பகுதியில் வைத்து 50 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.