மஹிந்தானந்த பொலிஸாரிடம் வழங்கியுள்ள 24 காரணங்கள் அடங்கிய 06 பக்க அறிக்கை

011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது.

இதற்கான 24 காரணங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் முன்வைத்துள்ளேன். எனவே, எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கிண்ண இறுதிப்போட்டி தொடர்பில் அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தானது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவினர் இன்று (24) வாக்குமூலம் பதிவுசெய்தனர்.

நாவலப்பிட்டியவில் உள்ள அவரின் அலுவலகத்தில் வைத்தே சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தைக் காண்பதற்காக நானும் சென்றிருந்தேன். எமது அணி தோல்வி அடைந்தமை தொடர்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன்பின்னர் பல தரப்பினரும் குறித்த போட்டி தொடர்பில் எனக்கு முறைப்பாடுகளை முன்வைத்தனர். இது தொடர்பில் நான் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தாலும் இம்முறையே பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. நான் எந்தவொரு வீரரினதும் பெயரைக் குறிப்பிடவில்லை.

ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான கருத்துகளையும், ஆவணங்களையும் நான் இன்று பொலிஸாரிடம் கையளித்தேன்.

24 காரணங்கள் அடங்கிய 6 பக்க அறிக்கையை முன்வைத்துள்ளேன். விசாரணைகள் இடம்பெறுவதால் அவை எவ்வாறான விடயங்கள் எனக் கூறமுடியாது.

நான் அரசியல் நோக்கிலோ அல்லது பிரசாரம் தேடுவதற்காகவோ இவ்வாறு கருத்து வெளியிடவில்லை. எனவே, விசாரணைகள் முடிவடையும்வரை விமர்சனங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பேசுவதை நிறுத்துவோம். விசாரணை அறிக்கை வரும்வரை காத்திருப்போம்.” – என்றார்.