முகக்கவசம் அணியாத பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் அபராதம் விதித்த நாடுகள்

கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறி செயல்பட்ட நாட்டின் பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பல்கேரியாவின் பிரதமரான பொய்க்கோ போரிசோவ் நேற்று அந்நாட்டின் ரிலா மனொஸ்டோரி நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு சென்றார். அங்கு பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஈடுபட்டார்.

ஆனால், இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் முகக்கவசம் அணியவில்லை. மேலும், அவருடன் சென்ற அதிகாரிகள் பலரும், பத்திரிக்கையாளர்களும் முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறியுள்ளனர்.

இதையடுத்து, முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் பொய்க்கோ பொரிசோவ் உள்பட அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பல்கேரிய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

அதன்படி பிரதமர் உள்பட அனைவருக்கும் தலா 300 லிவ்ஸ் (இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரேசில் அதிபர் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மீறினால் 30 ஆயிரம் ரூபாய் (இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியிலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அந்நாட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிபர் போல்சோனரோ பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தார்.

அதிபர் முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவரது ஆதரவாளர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன்படி அதிபர் போல்சோனரோ தனது வீட்டை விட்டு வெளியேறி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் அதிபர் போல்சோனாரோ விதிமுறைகளை மீறும் பட்சத்தில் 2 ஆயிரம் ரியல்ஸ் ( இந்திய மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.