2001 இல் கருணாவை பிரித்தெடுத்தது நாம் – அதன் பின்னர் செய்ததை ரணில் கூறினார்

2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி முக்கிய உறுப்பினர்கள் பலர் இன்று ரணில் விக்ரமசிங்கவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தனர்.

இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

ஒரே இரவில் 3000 படையினரை கொன்று குவித்ததாக கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பாதுகாக்கவே இவ்வாறானதொரு கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இராணுவ குடும்பங்கள் குழப்பமடைந்துள்ளன. 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்தோம்.

இதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கருணாவை உபாய முறையாக பயன்படுத்தினோம்.

எனினும் அதற்காக அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியில் உப தவிசாளர் பதவியினையோ, அமைச்சு பதவியினையோ வழங்கி உள்வாங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று 8 மாதங்கள் கடந்துள்ளது. ஆனால் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் முன்னெடுக்க முடியாமல் போனது.

கொவிட் – 19 வைரஸ் தொற்று இறுதி மூன்று மாதத்திலேயே நாட்டில் பரவியது. எஞ்சிய 5 மாதங்கள் அரசாங்கம் என்ன செய்தது. நாம் முன்னெடுத்த மக்கள் நல நிவாரணங்கள் திட்டத்தை கூட அரசாங்கம் வழங்கவில்லை.

இதனூடாக அரசாங்கத்தின் பொருளாதார இயலாமையே வெளிப்படுகின்றது என்னும் குறிப்பிட்டுள்ளார்.