அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை? – கொலை செய்தது பெண் ஒருவர்

பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சென்றுள்ள பெண் ஒருவரே அவரை பானம் ஒன்றில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி 27ம் திகதி பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான சமயங் உள்ளிட்ட சில கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் அங்கொட லொக்கா இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந்தியாவில் தலைமறைவாக இருந்த அவரை இலங்கையில் இருந்து சென்ற பெண் ஒருவர் விஷம் வைத்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் கூட இந்தியாவிலேயே இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பில் உளவுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

பெங்களுரில் வைத்து, அங்கொட லொக்காவின் உடலில் ஒருவகையான விஷம் செலுத்தப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பிலேயே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக தங்களுக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ தகவல் கிடைக்கவில்லை என காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.