இராணுவ அதிகாரியால் 45 பௌத்த பிக்குகளுக்கு ஏற்பட்ட நிலைமை

மொனராகலை – படால்கும்புர, கல்லோயா பௌத்த துறவிகள் மடத்தில் 45 பௌத்த பிக்குமார் உட்பட 72 பேர் மடத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ராஜா கொலுரே தலைமையில், ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து சென்ற இராணுவ அதிகாரி ஒருவர் கலந்துக்கொண்ட சமய நிகழ்ச்சியில் பங்கேற்ற துறவிகள் மடத்தை சேர்ந்த சிறிய பிக்கு உட்பட இரண்டு பிக்குகள், அந்த இராணுவ அதிகாரி பயன்படுத்திய ஒலிவாங்கியை பயன்படுத்தியமை காரணமாக இவ்வாறு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக மொனராகலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.பி.டி.கே.அதிகாரி தெரிவித்துள்ளார்.

புண்ணியதான நிகழ்வில் கலந்துக்கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பசறை பரகஹமங்கட பிரதேசத்தை சேர்ந்த இந்த இராணுவ அதிகாரி, வெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள அவரது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இராணுவ அதிகாரி பேருந்தில் முதியங்கன விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற பதுளை மாவட்ட செயலகத்திற்கு சென்று வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.