ஈஸ்டர் தாக்குதல் – அட்டாளைச்சேனையில் வீட்டில் மீட்கப்பட்ட ஆவணங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை போன்ற வெடிப்பொருட்களே 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த தற்போது மொனராகலையில் பணியாற்றும், முன்னர் அம்பாறையில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி சமந்த தீபால் விஜேசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் இருந்து பொலிஸார் வெடிக்கக்கூடிய 119 பொருட்களை கண்டெடுத்தனர். நிந்தவூர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 91 வெடிப்பொருட்களை அவர்கள் கண்டெடுத்தனர்.

இந்த இரண்டு இடங்களில் இருந்தும் பாரிய தொகை ஜெலிக்நைட் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும் இந்த ஜெலிக்நைட் குச்சிகள் எங்கிருந்து விநியோகம் செய்யப்பட்டன என்ற விபரங்கள் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

இதேவேளை அரச புலனாய்வு துறையினரின் தகவல்படி இந்த வெடிப்பொருட்கள் நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை ஆகிய இடங்களில் இருந்து சாய்ந்தமருது மற்றும் நிந்தவூருக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

அத்துடன், சம்மாந்துறையில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பான இல்லத்துக்கு ஜெலிக்நைட் குச்சிகள் குருநாகல் பிரதேசத்தில் இருந்தும் எடுத்துவரப்பட்டது.

இதேவேளை அம்பாறை அட்டாளைச்சேனையில் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் இருந்து ஆவணங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

அம்பாறையில் மொஹமட் நியாஸ் என்பவரே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவர் சாய்ந்தமருது வெடிப்பின்போது அவர் உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளரை வரழைத்த போதும் அவர் வராமை காரணமாகவே முன் படல் தகர்க்கப்பட்டது. எனினும் அங்கு வெடிமருந்துகள் எவையும் காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.