ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்த 268 பேர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான முழுமையான விபரங்கள் நாட்டின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 268 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்கள் குறித்து தாக்குதலின் பின்னர் வெளிக்கொணர வேண்டாம் அறிவிக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அப்போது பிரதி காவல் துறைமா அதிபராக செயற்பட்ட பிரியலால் தசநாயக்க நேற்றைய தினம் சாட்சி வழங்கிய போதெ இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, நீதிமன்ற பாதுகாப்ப பிரிவு, தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு ஆகியன கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டதாக காணப்பட்டதாகவும் சாட்சியத்தின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறவுள்ளதாக உங்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதா என வினவியது.

இதற்கு பதிலளித்த சாட்சியாளர், கடந்த 2019, ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அரச புலனாய்வு துறையின் பிரதானியால் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதமம் ஒன்று அவரால் தனக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தனக்கு கீழ் செயற்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்ததுடன், அது தொடர்பில் பல பேசசுவார்த்தைகளும் நடத்தினேன் என்றும் கூறினார்.

மீண்டும் குறுக்கிட்ட ஆணைக்குழு தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு உங்களின் அதிகாரத்திற்குட்பட்டதால் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு பாதுகாப்பினை வழங்கினீர்களா என வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், தூதுவர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் ஊடாக அப்போது வழங்கப்பட்டிரு்நத பாதுப்பிற்கு மேலதிகமாக உத்தியோகப்பூர்வ வாகனத்துடன், பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட ஐவரை இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் அக மற்றும் புறப்பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்ததோடு கொல்லுப்பிட்டி காவல் நிலையத்திலிருந்து சில காவல் துறை உத்தியோகத்தர்கள் பிரதான சாலையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களை தவிர்த்து மேலும் ஏதாவது தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக என ஆணைக்குழு தொடர்ந்தும் வினவியதற்கு சாட்சியமளித்த அவர், வேறு எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டார்.

கேள்வி – உங்களின் நேரடி அதிகாரத்துடனும் கையொப்பத்துடன் நியமிக்கப்பட்ட பணிப்பாளர்கள் ஐவருக்கும் அனுப்பி வைத்த கடிதங்கள் தாக்குதலின் பின்னர் ஊடகங்களுக்கு பகிரப்பட்டதா எனவும் ஆணைக்குழு கேள்வி எழுப்பியது.

ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் நானும் அந்த கடிதத்தினை பார்வையுற்றேன். ஆனாலும் அந்த கடிதம் எவ்வாறு ஊடகங்களுக்கு சென்றடைந்தது என்பது தொடரபில் நான அறியேன் என தெரிவித்தார்.

எனினும் தனக்கு கீழ் செயற்பட்ட அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் கித்சிரிறி அபொன்சு மூலம் இந்நாட்டின் முக்கிய நபர்கள் 268 பேருக்கு முன்னெச்சரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது குறித்த கடிதங்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் 268 பேருக்கு தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் தாக்குதலின் பின்னர் அறிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும் சாட்சியத்தின் போது அவர் குறிப்பிட்டார்.