கொரோனா அச்சநிலை கட்டுப்பாட்டில் – தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதுவரை இரண்டாம் கட்ட நிலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு மற்றும் சுகாதார தரப்பினரால் குறிப்பிடப்படவில்லை.

அதனால் பொதுமக்கள் ஊரடங்கு சட்டம் அகற்றப்பட்டதும் எவ்வாறு செயற்ப்பட்டனரோ அவ்வாறு தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

கைகளை கழுவுதல், முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

அத்துடன், கொரோனா தொற்றுக் குறித்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மிகவும் வேகமாக சுகாதாரத்துறை மற்றும் புலனாய்வுத் துறையினர் செயற்பட்டிருந்தனர்.

கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்மூலம் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முடிந்துள்ளது.

இதனால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் மற்றும் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்கு உரிய குற்றமாகும். ஆகவே இவ்வாறான பதிவுகளை தயாரித்த மற்றும் பகிர்ந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.