கொரோனா பரவல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொவிட் 19 தொற்று சர்வதேச ரீதியில் ஒழிக்கப்படும் வரை நாட்டில் அவ்வப்போது எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொவிட் 19 தொற்றுடைய சிலர் கண்டறியப்பட்டதுடன், தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தனிமைப்படுத்தல் முகாம்களை நிறுவி ஏனைய நாடுகளுக்கு இலங்கையே முன்னணியாக திகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

74 நாடுகளிலிருந்து 16 ஆயிரத்து 279 பேரை தாய் நாட்டுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

“தனிமைப்படுத்தல் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடுகின்றபோது பிரதேசவாசிகளின் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

அவ்வாறான தடைகளுக்கு மத்தியிலும் சவால்களை வெற்றிகொண்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கொவிட் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதனை அண்டிய நான்கு கொத்தனிகள் வரையான விரிந்த சுற்றுப்பகுதி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

உருவாகியுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருப்பதைப் போன்று எதிர்காலத்திலும் உருவாகும் சவால்களை வெற்றிகொள்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நோய்த் தொற்றுதியானவர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.