கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு

நீர்கொழும்பு வைத்தியசாலையில் நபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் ஹெரோயின் பாவனை குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கைதி சுவாச பிரச்சினை காரணமாக கடந்த 12ஆம் திகதி வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவர் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று இரவு 12.30 மணியளவில் குறித்த கைதி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியதனை தொடர்ந்து அதிகாரிகள் அவரை தேட ஆரம்பித்த போது அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய இளைஞர் எனவும் அவரது பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.