சம்பந்தனின் இரகசிய சந்திப்பு தொடர்பில் வௌியான தகவல்

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின், துனை தூதுவர், இரகசியமான முறையில் அரசியல் ரீதியான சந்திப்பை மேற்கொண்டதாக கூறப்படும் தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின், துனை தூதுவர், எஸ்.பாலச்சந்திரன் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் நேற்று சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே கருத்து தெரிவிக்கையில்,

இந்திய தூதரகத்தின் தரப்பினர் எனக் கூறிய சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று காலை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, நேற்றிரவு 8 மணிமுதல் 11.30 வரையில் திருகோணமலை நிலாவெளியில் உள்ள விருந்தகம் ஒன்றில், அவர்கள் இரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாகவும், அதில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எவரும் இல்லை என்றும் சுசந்த புஞ்சிநிலமே கூறியுள்ளார்.

இந்திய தூதரக காரியாலயத்தினர், எதிர்க்கட்சியினரை சந்திப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களையும் சந்திப்பதே ஜனநாயக பண்பாகும் என்றார்.

எனவே, இந்த சந்திப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரம, வெளிநாடுகளுக்கு சென்று குறைகூறி நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்கு தாம் இடமளிக்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இறைமையுடைய நாடு என்ற அடிப்படையில், நாட்டின் சட்டத்திற்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படும். எவரும், எவரையும் சந்திக்கலாம்.

ஆனால், முடிவுகளை தாங்களே மேற்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரம தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக இவ்வாறான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த இந்திய துணை தூதரகத்தின், துனை தூதுவர், தாம் தமது குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாகவும், அரசியல் ரீதியான சந்திப்புக்களை மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, தான் அறிந்தவர் என்றவர் அடிப்படையில் மரியாதை நிமித்தம், அவரை சந்தித்ததாகவும், அது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்றும் இந்திய துணை தூதரகத்தின், துனை தூதுவர், தெரிவித்தார்.