சம்பிக்கவின் முறைகேடுகளை ஆதாரங்களுடன் வௌியிடுவேன் மிரட்டும் முன்னாள் அமைச்சர்

ஜாதிக ஹெல உருமயவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பொறுப்பு கூற வேண்டிய, முறைகேடுகள் மற்றும் சட்ட விரோத செயல்கள் தொடர்பில் தன்னிடமுள்ள ஆதாரங்களை எதிர்காலத்தில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அமைச்சர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் மாத்திரமன்றி அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களில் அவர் செயற்பட்ட காலத்திலும் சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல முறைக்கேடுகள் தொடர்பான தகவல் தன்னிடம் இருப்பதாகவும் இதன்போது ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

மேலும் சம்பிக்க ரணவக்க ஒவ்வொரு முறையும் கட்சித் தாவல்களின் ஊடாகவே அவரின் இந்த சட்டவிரோத செயல்களை மறைத்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடன் பணிபுரிந்த சம்பிக்க அக்காலத்தில் செய்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பாட்டார் எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை காட்டிக்கொடுத்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டமை பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மற்றுமொரு சந்தர்ப்பவாத செயலை எடுத்துக்காட்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை காட்டிக்கொடுத்து மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார் எனவும் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியை காட்டிக்கொடுத்து மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்துள்ள சம்பிக்க ரணவக்க அந்த கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக மிகவும் தந்திரமாக செயற்பட்டு வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க இதுவரைக் காலமும் தான் செய்த ஊழல், முறைக்கேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்களை மறைப்பதற்காக கட்சித் தலைவர்களை காட்டிக்கொடுத்து கட்சித் தாவல்களை மேற்கொண்டுள்ளார்.

அவரின் அவ்வாறான செயல்களுக்கு இனியும் இடமளிக்காது அவரின் சட்டவிரோத செயல்கள் தொடர்பான ஆதாரங்களை வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.