சினமன் கிரேண்ட் ஹோட்டல் தாக்குதல்தாரி தொடர்பில் தற்போது வௌியாகியுள்ள முக்கிய தகவல்கள்

சினமன் கிராண்ட் விடுதியில் குண்டு தாக்குதலை நடத்திய இன்சாப் அஹமட் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் அதாவது அந்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை தனது வங்கிக் கணக்கிலிருந்து 4.5 மில்லியன் நிதியை பெற்றுள்ளதாக தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.

´இன்சாப் அகமட்டுக்கு சொந்தமான கொலோசஸ் செப்பு தொழிற்சாலையின் முகாமையாளர், ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில், 370 செப்பு கொள்கலன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

சினமன் கிராண்ட் விடுதியில் குண்டு தாக்குதலை நடத்திய இன்சாப் அஹமட்க்கு சொந்தமான ´கொலோசஸ்´ செப்பு தொழிற்சாலையின் முகாமையாளர் சனுன் மொஹமட் இசாட் நேற்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்தார்.

´கொலோசஸ்´ செப்பு தொழிற்சாலையின் உரிமையாளராக இன்சாப் அகமட் கடமையாற்றியிருந்தாலும் 2019 ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கொலோசஸ் நிறுவனத்தின் உரிமை மொஹமட் யூசுப் இப்ராஹிம் மற்றும் மொஹமட் சிக்கா ஆகியோருக்கு மாற்றப்பட்டதாக சாட்சியாளர் கூறினார்.

கொலோசஸ் நிறுவனம் 30 உள்ளூர் ஊழியர்கள், 20 இந்தியர்கள், நேபாளம் மற்றும் பங்களாதேசயர்களைக் கொண்ட ஒரு செப்பு ஏற்றுமதி தொழிற்சாலையாகும் என தொழிற்சாலையின் முகாமையாளர் கூறினார்.

அந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சாலைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் ஏன் சேர்க்கப்பட்டனர் என்பது குறித்து ஆணைக்குழு வினவியது.

இதற்கு பதிலளித்த தொழிற்சாலையின் முகாமையாளர் ´கொலோசஸ்´ செப்பு தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்களை இயக்குவதற்கான அறிவு இந்தியர்களுக்கு மாத்திரமே இருந்தாக கூறினார்.

´கொலோசஸ்´ செப்பு தொழிற்சாலை நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான செப்புக் குழாய்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சாட்சியாளர் மேலும் கூறினார்.

வெளிநாட்டினருக்கான விசாக்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது குறித்து ஆணைக்குழு விசாரித்தது, இதற்கு பதிலளித்த அவர் வணிக அமைச்சின் மூலம் விசா பெறப்பட்டதாக தெரிவித்தார்.

2012 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்குள் தலா 20 டொன் அளவுடைய 370 கொள்கலன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

´கொலோசஸ்´ செப்பு தொழிற்சாலை நிறுவன உரிமையாளர் இன்சாஃப் அகமட்டை சிறு குழந்தை முதல் நன்கறிவதாகவும் அவர் தினமும் அலுவலகத்திற்கு வருவதாகவும் அவர் கூறினார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர்களின் பிரதான அலுவலக காரியாலயத்தில் உள்ள ஒரு கருத்தரங்கு அறையில் ஜசில் தனது இரண்டு சகோதரர்களான இன்சாஃப் மற்றும் இல்ஹாம் ஆகியோருடன் மாலையில் அரபு மொழியைப் படித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஆணைக்குழு குறித்த அறையில் அரபு மொழியை கற்றார்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், அரபு மொழி கற்ற ஒருவர் 20,000 ரூபாவை செலுத்தியதாகவும் அனுதினமும் அறைக்கு சென்று பார்த்தால் அரபு மொழி கற்பித்தமைக்கான சான்றுகள் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

இருப்பினும், ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் மாலை வேளைகளில் போதனைகள் நடந்தாகவும் அந்த இடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றது என்றும் சாட்சியாளர் கூறினார்.

ஏப்ரல் 17, 2019 அன்று, மதியம் 1.30 மணியளவில் இன்சாஃப் தனது அலுவலகத்திற்குச் வருகைத்தந்து 34 மில்லியன் பணத்திற்குரிய காசோலையை வழங்கி பணத்தை எடுத்துக்கொண்டு வருமாறு தம்மை அறிவுறுத்தியாதாக அந்த முகாமையாளர் தெரிவித்தார்.

அதில் தனது சகோதரர் இஃப்லால் அகமட்டின் வங்கிக் கணக்கில் 5.5 மில்லியனும், இன்சாப்பின் கணக்கில் 27.5 மில்லியனும், மீதமிருந்த 11 இலட்சமும் வைப்பிலிடுமாறு அவர் தெரிவித்தாக முகாமையாளர் கூறினார்.

ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை, இன்சாஃப் தனது ஆடம்பர ஜீப்பில் தனது அலுவலகத்திற்கு திரும்பி வந்து 65 இலட்சம் பணத்தை வண்டியில் வைக்குமாறு கூறியதாக அந்த முகாமையாளர் கூறினார்.

அப்போது இன்ஷாப் ஜீப்பை வண்டி தொடர்பான புத்தகத்தை வழங்கிய பின்னர் 10 வெற்று காசோலைகளில் கையெழுத்திட்டு அதனையும் வழங்கி அந்த ஜீப்பில் அங்கிருந்து சென்றதாக கூறினார்.

ஏப்ரல் 23 ஆம் திகதி இன்சாப் மலேசியாவுக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ததாகவும் அதேபோல் மே மாதம் தனது குடும்பத்தினருடன் மக்காவுக்கு செல்ல விமான டிக்கட்டுகளை தயார்படுத்தி வைத்திருந்தாகவும் முகாமையாளர் கூறினார்.

இன்சாப் சுமார் ஒன்றரை வருடத்திலிருந்தே இதுபோன்ற மாற்றத்திற்கு உட்பட்டதாக கூறிய முகாமையாளர் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுப்படுவார் என்று ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் கூறினார்.

இன்சாப்பின் நடவடிக்கைகளால் நாடு முழுவதும் நெருக்கடியான சூழலுக்குள் சிக்கியதாகவும் தனது புதல்வன் கொலோசஸ் நிறுவனத்தில் கடமையாற்றியதால் இதுவரை அவரால் ஒரு தொழிலை பிடிக்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் ´கொலோசஸ்´ செப்பு தொழிற்சாலையின் முகாமையாளர் சனுன் மொஹமட் இசாட் மேலும் தெரிவித்தார்.