தான் இனவாதியாக சித்தரிக்கப்பட காரணம் – விஜேதாஸ வெளியிட்ட தகவல்

அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒருபோதும் இணைத்துக் கொள்ளமாட்டோம்.

நல்லாட்சியில் காணப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சுட்டிக்காட்டியதால் அடிப்படைவாதிகளினால் நான் இனவாதியாக சித்தரிக்கப்பட்டேன் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதோங்கியுள்ளது என்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பல முறை குறிப்பிட்டேன்.

நீதியமைச்சர் பதவி வகிக்கும் போது தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிட்ட விடயங்கள் பரிகாசம் செய்யப்பட்டது.

ஆனால் நான் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் 2019 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் நிறைவேறியது.

அடிப்படைவாதத்துடன் அரசியல்வாதிகள் தொடர்புப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டதை அப்போதைய அரசாங்கத்தில் உயர் தரப்பில் இருந்தவர்கள் பொருட்படுத்தவில்லை.

எனது கருத்துக்கு எதிர் கருத்து குறிப்பிடுவதில் கவனம் செலுத்தி என்னை இனவாதியாகவும், நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

அடிப்படைவாதிகளுடன் தொடர்புடையதாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல்வாதிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒருபோதும் இணைத்துக் கொள்ளமாட்டோம்.

அனைத்து இன மக்களையும் ஒன்றினைத்து முரண்பாடற்ற சிறந்த அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார், எனத் தெரிவித்துள்ளார்.