பணத்திற்காக போட்டிகளை காட்டிக் கொடுத்த இலங்கை கிரிக்கட் வீரர்களின் பெயர் பட்டியல்

இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த கிரிக்கெட் வீரர்களில் போட்டிகளை காட்டி கொடுத்தவர்கள் அல்லது போட்டியின் முடிவுகளை மாற்றிய வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

சனத் ஜயசூரிய, கௌசல்ய லொக்கு ஆராச்சி, தில்ஹார லொக்கு ஹெட்டிகே, நுவன் சொய்சா, அவிஸ்க குணவர்தன, ஜீவந்த குலதுங்க, ஜயானந்த வர்ணவீர, தரிந்து மெண்டிஸ், அனுஷ சமரநாயக்க, சாமர சில்வா ஆகியோர் இந்த படடியலில் அடங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவர்களில் சாமர சில்வா, அண்மைய காலத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.

இந்தியாவுடன் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டி பணத்திற்காக காட்டிக் கொடுக்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான உலக புகழ்பெற்ற குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன மற்றும் அப்போது தெரிவுக்குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா ஆகியோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இது நாட்டில் பெரும் சர்ச்சைகளையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து போட்டி காட்டிக் கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்கள் இல்லை எனக் கூறி பொலிஸார் விசாரணைகளை நிறைவு செய்தனர்.