மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் புர்கா ஒரு வாரத்திற்குள் தடை செய்யப்பட வேண்டும்

முஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் தடை செய்யவேண்டும் என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் உடனடியாக பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சமூகத்தில் உள்ள சில சக்திகள் மதவாதத்தை ஊக்குவித்தன என குற்றம்சாட்டியுள்ள அவர் அரசாங்கம் இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதற்கான சரியான தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து முஸ்லீம் தீவிரவாதிகள் பல சமூகவிரோத அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் என அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.

சிலமுஸ்லீம் கடைகள் குறிப்பிட்ட வங்கியை தாங்கள் புறக்கணிக்கபோவதாக அறிவித்தல் பலகைகளை காட்சிப்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இது இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதரஸாக்கள், புர்கா மற்றும் காதிநீதிமன்றங்களை தடை செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த விடயம் குறித்து பௌத்த மதகுருக்களின் தலைமைப்பீடங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.