மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை வௌியிட்டுள்ள செய்தி

2011 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான தகுதியான விசாரணையை ஆரம்பிப்பதற்கு தங்களுக்கு எந்தவொரு ஆதாரமும் வழங்கப்படவில்லை என சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்துள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஸல் Alex Marshall இதனைத் தெரிவித்துள்ளார்.

2011 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதேநேரம், 2011 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக கண்டறியப்படாதமையினால், அது தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த குற்றச்சாட்டு தொடர்பாக, விளையாட்டில் இடம்பெறும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதனை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் குமார் சங்கக்கார, உபுல் தரங்க ஆகியோரிடமும் அந்த விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.