அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – முஸ்லிம் மரண வீட்டில் சாணக்கியன்

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், குறித்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் நேற்று (09) சென்றிருந்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரதேச மக்களையும் சந்தித்து இருவரும் ஆறுதல் கூறியிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன், ´´இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் ஒரு விதமாகவும், பொலிஸார் ஒரு விதமாகவும், உறவினர்கள் ஒரு விதமாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் பாராபட்சமற்ற நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்பதல்ல விடயம்.

இதுபோன்ற அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாதென்பதற்காகவே நாம் இங்கு வருகை தந்துள்ளோம்.´´ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இரா. சாணக்கியன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திலும் கருத்து வெளியிட்டிருந்ததுடன், நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, இதற்கு முன்னர் இதுபோன்ற மற்றுமோர் சம்பவம் மட்டக்களப்பு பகுதியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *