உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் வௌியிட்ட பல முக்கிய தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அதற்கு முன்னர் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றதாக கூறப்படும் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் 881 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 724 பேர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனையோர் தாக்குதலுக்கு முன்னரான பல்வேறு அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் அரச தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், குறித்த தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய 8 வழக்குகள் தற்போதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

8 தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தனித் தனியாக பிரதான வழக்குகள் எதிர்வரும் ஜூலை 3 ஆம் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதன்போது குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலையை இதன்போது வெளிப்படுத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் 2019 ஏப்ரல் மாதம் அந்தந்த பொலிஸ் நிலையங்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சிஐடியினரிடம் கையளிக்கப்பட்டன.

அது முதல் இந்த தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் 724 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 227 பேர் விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்ப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 83 பேர் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சிரிஐடி எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 205 மில்லியன் ரூபா வரையிலான பணம், தங்க நகைகள், மாணிக்கக் கற்கள் பொலிஸாரினால் இந்த விசாரணைகளில் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 100 வங்கிக் கணக்குகளில் உள்ள 134 மில்லியன் ரூபா பணம் வரை தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் 9800 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 21 ஆயிரம் தொலைபேசி இலக்கங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

1000 ஏக்கர் வரையிலான நிலம் பெளதீக ரீதியாக பொலிஸ் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன. கேகாலை, புத்தளம் மாவட்டங்களில் இவ்வாறான நிலங்கள் பொலிஸ் பொறுப்பில் உள்ளன.

இது இவ்வாறிருக்க, இந்த விசாரணைகளை முன்னெடுத்து செல்லும்போதே, தற்கொலை குண்டுதாரிகளுக்கு தலைமை வகித்த ஸஹ்ரான் ஹாஷிம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அடிப்படைவாத நடவடிக்கைகளை திட்டமிட்டு பரப்பியமை தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டன .

எனவே பொலிஸார், தாக்குதல் சம்பவங்களுக்கு மேலதிகமாக 2018 ஆம் ஆண்டு முதல் அடிப்படைவாதத்தை வளர்க்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாத வகுப்புக்களை அவர் நடத்தியிருந்தார்.
அந்த வகுப்புக்களில் பங்கேற்று, தற்கொலை தாக்குதல்கள் நடாத்த ‘ பையத்’ எனும் உறுதி மொழி எடுத்த 84 ஆண்கள், 7 பெண்கள் இதுவரை விசாரணைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் முகப்புத்தகம், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் ஊடாக அடிப்படைவாத நடவடிக்கைகளை ஊக்குவித்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் ஸஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த, அடிப்படைவாத நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவி ஒத்தாசை வழங்கிய 23 ஆண்கள் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 2018 ஆம் ஆண்டு முதல் சஹ்ரான் ஹாஷிமின் அடிப்படைவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வெளிநாடுகளில் இருந்து நிதியளித்த, ஆதரவளித்த 15 பேர் கத்தார், துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி மொத்தமாக இதுவரை 800 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.’ என தெரிவித்தார்.

தகவல் – மெட்ரோ நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *