இழப்பீட்டை பெறுவதற்காக தீயை கட்டுப்படுத்தவில்லையா? வௌியான தகவல்

எக்ஸ்பிரஸ் கப்பல் கொழும்பு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த நிலையில் கப்பலின் VDR சாதனம், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தில் கப்பலின் பயண தகவல் மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

VDR சாதனத்தின் மேலதிக தரவு பகுப்பாய்வுக்கான அதன் தாய் நிறுவனத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த எக்ஸ்பிரஸ் கப்பல் கெப்டன், நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சேதத்திற்கான இழப்பீட்டை பெறலாம் என்ற நோக்கத்தில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் மூண்ட தீயை துறைமுக அதிகாரிகள் கட்டுப்படுத்தவில்லை என கப்பல் கப்டனின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சரத்ஜயமான தெரிவித்துள்ளார்.

20ம் திகதி கப்டன் கப்பலில் தீ மூண்டுள்ளது என அறிவித்ததை தொடர்ந்து, அன்று மாலை 4.30 மணியளவில் கப்பலிற்குள் ஏறிய அதிகாரிகள் ஒன்றரை மணிநேரம் கப்பலை சோதனையிட்டனர் என சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதிசொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னக்கோன் கப்பல் கப்டனும் பணியாளர்களும் கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழைந்தவேளை கப்பலில் நைட்ரிக் அசிட் கசிவு ஏற்பட்டுள்ளதை மறுத்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ள அவர் கப்பல் தீப்பிடித்ததால், நாட்டின் சூழலுக்கு குறுகியகால நீண்ட கால பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

சிதைவடைந்து மூழ்கிய நிலையில் உள்ள கப்பல் காரணமாக, வேறு கப்பல்கள் அந்த பகுதியால், பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *