வீடுகளுக்கு சென்று கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் செய்தவர் கைது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் நபர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் குணப்படுத்துவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் போலி வைத்தியர் மற்றும் அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹபொல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்குச் சென்று, வைரஸ் தொற்றிலிருந்து அவர்களைக் குணப்படுத்துவதாக தெரிவித்து சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, கெஸ்பேவ பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர், கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் ஒருவரையும் அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய நபரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து பல வகையான மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

சிகிச்சை அளிப்பதற்காக சந்தேக நபர்கள் ஒருவரிடமிருந்து தலா 12,000 ரூபா வரை அறவிடுவதாக தெரிய வந்துள்ளது.

இவர்கள் பேஸ்புக்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணப்படுத்துவதற்கு தங்களால் முடியும் என்று பதிவேற்றியுள்ளதுடன், அதனூடாக தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களிடமே இவ்வாறு பண மோசடிகளை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கெஸ்பேவ பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் , அவர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த போலி வைத்தியரின் உதவியாளராக செயற்பட்டவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.