கொழும்பு வரும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட தீர்மானம்

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று முதல் விசேட ஸ்டிக்கர் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்

குறித்த ஸ்டிக்கர் ஒரு நாளைக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஒரே வாகனத்தை மீண்டும், மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துவதை தவிர்ப்பதற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, கொழும்பு நகருக்குள் அத்தியவசிய தேவைகளுக்காக பயணிக்கின்ற வாகனங்கள், கடுமையாக பரிசோதிக்கப்பட்டு ஒரு இடத்தில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்துவதன் ஊடாக, அத்தியவசிய தேவைகளில் ஈடுபம் நபர்களுக்கு காலதாமதம் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே இந்தத தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதன்படி, ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள், அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், கொழும்பு நகருக்குள் அத்தியவசிய தேவைகளுக்காக பிரவேசிக்கும் நபர்கள், உரிய ஆவணங்களை தம்வசம் வைத்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.