ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலையில் நடைபெறுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி களில் பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகளுக்காக 160,000 ஆணுறைகளை இலவசமாக வழங்குவதற்காக இம்முறை ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், ஒலிம்பிக் இடம்பெறும் கால எல்லையினுள், குறித்த ஆணுறைகளை பயன்படுத்துவதற்கு எந்தவொரு வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் ஆணுறைகளை, ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுபெற்றதன் பின்னர் வீர, வீராங்கனைகள் நினைவுசின்னமாக எடுத்துச்செல்வதற்கு அனுமதியளிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி தகவல்கள்

பொதுவாக தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆண்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதால், அவர்கள் உடலுறவில் ஈடுப்படுகின்றனர் என்றும், அவர்களின் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஒலிம்பிக்கில் வீரர்களுக்கு ஆணுறை இலவசமாக வழங்குவது பாரம்பரிய முறையாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், அதிகமாக உடலுறவில் ஈடுபட்டால், அது வீரர்களின் கவனத்தை சிதறடிக்கும் என்று பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கர்ப்ப தடை மற்றுமின்றி ‘எயிட்ஸ்’ ஏற்படாமல் பாதுகாக்கவும் ஆணுறை பயன்படுத்தப்படுகிறது. கடந்த 1988ம் ஆண்டில் சியோல் ஒலிம்பிக்கில் முதன்முதலில் விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து அனைத்து ஒலிம்பிக் போட்டியிலும் வீரர்களுக்கு ஆணுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது, 4.5 லட்சம் ஆணுறைகள் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, சராசரியாக ஒவ்வொரு விளையாட்டு வீரரும் 42 ஆணுறை பயன்படுத்தியிருக்கலாம் என்கின்றனர். அதே, 2008ல் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது 4 லட்சம் ஆணுறை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

சில வீரர்களுக்கு ஆணுறை பற்றாக்குறை ஏற்பட்டதால், அவர்கள் தங்கள் சொந்த செலவில் ஆணுறையை வாங்கி பயன்படுத்தினர்.

இந்த நிலையில் டோக்கியோவில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறை விநியோகம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி – 2020 (ஐஓசி) வெளியிட்டுள்ள 33 பக்க ‘ரூல் புக்’ கையேட்டில்,

விளையாட்டு வீரர்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் சுமார் 15 ஆணுறைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 1,60,000 ஆணுறைகள் விநியோகிக்கப்படும். ஆனால், வழங்கப்பட்ட ஆணுறைகளை வீரர்கள் பயன்படுத்தக் கூடாது.

வீரர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால், உடல் ரீதியான அரவணைப்பு மற்றும் கைகுலுக்குதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைகளை விநியோகம் செய்வது அவர்கள் பயன்படுத்துவதற்காக அல்ல; வீரர்கள் அதனை தங்களது சொந்த நாடுகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு ஆணுறை வழங்குவதன் மூலம், கொரோனா விதிமுறைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க முடியும் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொவிட் பரவல் நிலைமை காரணமாக, ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள் உடல் ரீதியான தேவையற்ற தொடர்பினை பேணுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்படும் அனைவரும் சமூக இடைவெளி தொடர்பான வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என தேசிய ஒலிம்பிக் சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *