பள்ளிவாசல் உண்டியலை உடைத்து திருடியவரிடம் மீட்கப்பட்ட போதைப்பொருள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேச ஜும்ஆப் பள்ளிவாயல் உண்டியலை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிய இருபது வயதுடைய இளம் சந்தேக நபரொருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் வழங்கிய மிகத்துல்லியமான தகவலின் அடிப்படையில் வாழைச்சேனைப் பொலிஸாரின் உதவியுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 2,250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்தவர் என்றும் ஏறாவூரில் திருமணம் முடித்துள்ளதாகவும் முதற்கட்டத் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, பள்ளிவாயல்கள் உண்டியலை உடைத்து திருடிய தொடர்பிலும் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பிலும் வாழைச்சேனைப் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிரதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக பயணத்தடை அமுலிலுள்ள சந்தர்ப்பதை சாதகமாகப் பயன்படுத்தி இவ்வாறான திருட்டு மற்றும் போதைப்பாவனை, விற்பனை மிகத்தீவிரமாக தலை தூக்கியுள்ளதுடன், இவ்வாறான சமூகச் சீர்கேடுகள் தொடர்பில் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *