இன்று பிணை வழங்கப்பட்ட ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்

இன்று காலை பிணை வழங்கப்பட்ட ஷானி அபேசேகர உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப ​பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது.

அவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ள நீதிமன்றம், அவர்களின் கடவுச் சீட்டுக்களை மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமான முறையில் ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் சென்றதாக போலி சாட்சியங்களை முன்வைத்த குற்றச்சாட்டில் கம்பஹா மேல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, கம்பஹா மேல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, சானி அபேசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த விளக்கமறியல் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மீளாய்வு மனு, மேன்முறையீட்டு நிதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை, தலா 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

எவ்வாறாயினும் மேன்முறையீட்டு நீதிமன்றினால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள்
தொடர்பாக எழுத்து மூலமான அறிவிப்பு கம்பஹா நீதிவானுக்கு கிடைக்கப்பெறாமையினால் இருவரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *