பியுமி ஹன்சமாலி சென்ற பஸ்ஸை திருப்பி அழைத்த சம்பவம் தொடர்பில் அமைச்சரின் விளக்கம்

பயணத்தடையை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அழகுக்கலை கலைஞர் பியுமி ஹன்சமாலி உள்ளிட்டவர்கள் பயணித்த பஸ்ஸை மீண்டும் கொழும்புக்கு திருப்புமாறு தொலைபேசியில் பணிப்பு விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரபல அமைச்சர், சரத் வீரசேகர என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் சரத் வீரசேகரவே அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிப்பு விடுத்துள்ளார்.

பியுமி ஹன்சமாலி, சந்திமால் ஜயசிங்க மற்றும் அவர்களது சட்டத்தணி தன்னை தொலைபேசியில் அழைத்து தனிமைப்படுத்தல் காலத்தில் பயன்படுத்த தேவையான உடைகள் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்குமாறு கேட்டதாகவும் அதனால் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு பஸ்ஸை கொண்டு சென்று அங்கு தரித்து வைத்திருந்ததாகவும் அமைச்சர் சரத் வீரசேகரவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பஸ்ஸை உடனடியாக கொழும்புக்கு திருப்புமாறு தான் பணிப்பு விடுக்கவில்லை என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஆடை உள்ளிட்ட தேவையான பொருட்கள் சேகரித்த பின் குறித்த பஸ் பதுளை பசைறையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை நோக்கி சென்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் பியூமி உள்ளிட்டவர்கள் பயணித்த பஸ்ஸை உடனடியாக திருப்பி கொழும்புக்கு வருமாறு பிரபல அமைச்சர் ஒருவர் பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாகவும் அது வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் ஹிரு தொலைக்காட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.