இரவில் கைது செய்யப்பட்ட இளைஞன் காலையில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

மட்டக்களப்பு, பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறிவந்தவர்களினால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று இரவு 10.30 மணியளவில் மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு ஏழாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுசன் என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து வெளியில் வருமாறு கூறியபோது குறித்த இளைஞர் வெளியில் வந்ததாகவும் இதன்போது வீதியில் நின்ற புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறிக்கொண்டவர்கள் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞன் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறப்பட்டவர்களினால் கடுமையான முறையில் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை குறித்த இளைஞன் நோய் காரணமாக இறந்துவிட்டதாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் தாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டிற்கு சிவில் உடையில் சிஜடி யினர் வந்து தனது மகனை கைது செய்தனர் எனவும், எனது மகனுக்கு வருத்தம் எதுவும் இல்லாது நல்ல நிலையில் இருந்ததாகவும் பொலிசார் இரவு கொண்டு சென்றதன் பின்னர் காலையில் உயிரிழந்ததாக அறிந்தோம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நிருபர்