போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கம்; ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

போக்குவரத்து கட்டுப்பாடு நாட்டில் எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படவுள்ள நிலையில், அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு செயற்பட வேண்டும் என்றும், வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்தோடு கொவிட்-19 மரணங்கள் தொடர்பான தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்றும், அவை ஏனைய தீர்மானங்களை எடுப்பதற்கு அவசியமாகுமென்றும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

கொவிட் ஒழிப்புக்கான விசேட குழு இன்று (18) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி , எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்து கட்டுப்பாடு களைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் , மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்க வேண்டும்.

அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்படும்.

அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடர, நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *