சட்டவிரோத செயல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய குடும்பத்துக்கு ஏற்பட்ட நிலை

தமது கிராமத்தினுள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மதுபான வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய குடும்பம் ஒன்று தமது வீட்டினையும், மகனையும் இழந்துள்ள சம்பவம் தொடர்பில் நிவிதிகல, கிரிவத்கல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நிவிதிகல, கிரிவத்கல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் கடந்த 07 ஆம் திகதி குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

குறித்த வியாபாரம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்திற்கு பல முறைகள் அறிவிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்தினை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களில் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரின் வீட்டினை அடித்து நொறுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவரை குறித்த கும்பல் துரத்திச் சென்றுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

ஒரு வார காலமாகியும் தனது மகன் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த 07 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து பிணையில் விடுதலையான சந்தேகநபர்கள் தமது மதுபான வியாபாரத்தை வழமைப்போல முன்னெடுத்துச் செல்வதாகவும், தம்மை பிரதேசத்தில் இருந்து வௌியேறுமாறு அச்சுறுத்தி வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *