ஒரே வீட்டில் தாயும் மகனும் உயிரிழப்பு – ஏறாவூரில் சம்பவம்

மட்டக்களப்பு செய்திகள் – வீட்டில் மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயார் சில மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (20) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

புதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஞானப்பிரகாசம் மைக்கல் என்பரும் அவரின் தாயாரான 70 வயதுடைய ஞானப்பிரகாசம் பாக்கியம் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டவர் புதூர் பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் 2 தினங்களுக்கு முன்னர் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஏறாவூர் ஜயங்கேணியிலுள்ள அவரது தாயார் தனிமையில் வாழ்ந்து வரும் வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று முற்பகல் 11 மணி அளவில் மகனை காணவில்லை என தாயார் தேடியுள்ளார்.

இதன்போது வீட்டின் அறைக்கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் உறவினர்களின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உட்சென்று பார்த்த போது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாயாருக்கு சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரும் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். – மட்டக்களப்பு செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *