கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்; எச்சரிக்கப்பட்ட பிரதேசங்கள்

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், இதன்போது, கடுமையான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழைப்பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் இடி மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள திறந்த வெளிகளில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை பிற்பகல் 2.30 மணிமுதல் – நாளைமறுதினம் (19) பிற்பகல் 2.30 மணிவரையான காலப்பகுதியில் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

ஏனைய கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்றும், ஏனைய கடற்பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.